Sukirtharani


விடுதலையின் பதாகை - Poem by Sukirtharani

என் கிராமத்தின் தேகமெங்கும்
வர்க்கத்தின் இருள் கவிந்திருக்க
அச்சமூட்டும் துரோகியின் குறுவாளைப் போல
பிசிரின்றி
எரிந்துகொண்டிருக்கிறது இரவு
அன்று வானம் நீலமாயும்
நட்சத்திரங்கள் சீம்பாலைப் போலவும்
மின்னிக் கொண்டிருந்தன
மூங்கில் கூடையில் வெளிச்சம் வாரப்பட்ட
வீட்டின் முற்றத்தில்
நிர்வாணமாய்க் கிடத்தப்பட்டிருக்கிறேன்
கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன
தமையனைக் கூடச்சொல்லும் வக்கிரம்
இரவின் உச்சாடனமாய் ஒலிக்க
ஆதிக்கத்தின் கருந்திரவத்தைப் பருகியவர்கள்
என் யோனியில் பள்ளம் பறித்துப்
பருத்த கம்பொன்றை நிறுத்துகிறார்கள்
என் வலியின் ஓலத்தில்
அரங்கேறுகிறது ஒரு சாதிக்கூத்து
ஆடிக் களைத்தவர்களின் குறியிலிருந்து
வழிந்தோடிய வன்மத்தின் கால்வாயில்
வீசப்படுகிறது என் உடல்
செவிட்டுப் போர்வையிலிருந்தும்
குருட்டுத் தூக்கத்திலிருந்தும் விடுபடாத தேசத்தில்
சட்டையுரிக்கும் சர்ப்பத்தின் உக்கிரத்தோடு
மண்ணுக்குள் புதைகிறேன்
யோனியில் ஊன்றிய கம்பின் உச்சியில்
குருதியின் நிறத்தோடு பறக்கும்
எம் விடுதலையின் பதாகை.
224 Total read